செய்திகள்

168 பெண் குழந்தைகளின் திருமணம் தடுக்கப்பட்டுள்ளது- கலெக்டர் தகவல்

Published On 2018-12-23 22:17 IST   |   Update On 2018-12-23 22:17:00 IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு 168 பெண் குழந்தைகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ‘பெண் குழந்தைகள் காப்பாற்றுவோம், பெண் குழந்தைகள் கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் ஆண், பெண் பாகுபாடு போட்டி நடைபெற்றது. இதில் மாணவர்கள் வீட்டு சமையல் வேலை செய்வது போன்றும், பெண்கள் விளையாட்டு, அரட்டை அடிப்பது என பொழுதை கழித்தும் உள்ளனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், செல்ல மகளுடன் ஒரு செல்பி புகைப்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு கேடயமும் வழங்கும் நிகழ்ச்சியும் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டீனா தா.டார்த்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டஅலுவலர் தமிழரசி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கலெக்டர் பேசியதாவது:–

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டுக்கு முன்பு 1000 ஆண் குழந்தைகளுக்கு 965 பெண் குழந்தைகள் என்று இருந்தது. தற்போது அந்த நிலை மாறி 2017–18–ம் ஆண்டு 1000 ஆண் குழந்தைகளுக்கு 882 பெண் குழந்தைகளாக குறைந்துள்ளது.

ஆண்கள் மட்டும் தான் இருக்க வேண்டும். பெண்கள் அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை எங்கு ஆரம்பிக்கப்பட்டது என்றால் நமது கலாசாரம் தான் காரணம். ஒரு குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகள் 2–ம் நிலையில் வைக்கப்படுகிறார்கள். பெண்களின் ஆற்றல் அனைத்தையும் சமமாக பார்க்கக்கூடிய ஊரில் நாம் இருக்கிறோம். ஆனால் நமது மாவட்டம் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் மாநில அளவில், தேசிய அளவில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.

இந்த நிலையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஆண், பெண் பாகுபாடு அகற்றப்பட்டு சமமாக நடத்த வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு 168 பெண் குழந்தைகளின் திருமணம் தடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அரசு கலைக் கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, சாதம், ரசம், உருளைகிழங்கு பொறியல் போன்றவற்றை அவர்களுடன், கலெக்டர் சேர்ந்து சாப்பிட்டார்.
Tags:    

Similar News