செய்திகள்

பெரம்பலூர், அரியலூரில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை- கிராம நிர்வாக அதிகாரிகள் 107 பேர் கைது

Published On 2018-12-22 18:05 GMT   |   Update On 2018-12-22 18:05 GMT
பெரம்பலூர், அரியலூரில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் 107 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:

கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு அலுவலகங்களில் கணினி, இணையதள வசதி போன்ற அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும். மாவட்ட அளவிலான பணிமாறுதல், கிராம நிர்வாக அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று உட்பிரிவுகளில் பட்டா வழங்குதல் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் கடந்த 10-ந் தேதி முதல் பணியை புறக்கணித்து காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஆனாலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. இந்நிலையில் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திட ஏற்கனவே முடிவு செய்தனர். இந்நிலையில் திடீரென்று அந்த முடிவை கைவிட்ட சங்கத்தினர் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலையில் திரண்டனர்.

இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ராஜா தலைமையில், அச்சங்கத்தினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அனுமதி இன்றி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக 16 பெண்கள் உள்பட 79 கிராம நிர்வாக அதிகாரிகளை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி, அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல் கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மணிவண்ணன் தலைமையில், அச்சங்கத்தினர் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்து, அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 
Tags:    

Similar News