செய்திகள்

வீடு கட்ட குறைந்த வட்டியில் கடன் வாங்கும் திட்டம்- நாராயணசாமி தொடங்கி வைத்தார்

Published On 2018-12-19 22:42 IST   |   Update On 2018-12-19 22:42:00 IST
புதுவையில் வீடு கட்ட குறைந்த வட்டியில் கடன் வாங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

புதுவை அரசு சார்பில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு ரூ.4 லட்சமும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு ரூ.2 லட்சமும் வீடு கட்டுவதற்கு மானியமாக வழங்கப்படுகிறது.

பிற்படுத்தப்பட்டோர் தங்களுக்கு ரூ.2 லட்சம் போதாது, கூடுதலாக பணம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பொதுத்துறை வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் ரூ.2 லட்சம் கடன் வழங்கும் திட்டத்தை அரசு கொண்டு வந்தது.

இந்த திட்டத்தின் தொடக்க விழா இன்று கரியமாணிக்கத்தில் நடந்தது. விஜயவேணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயண சாமி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

புதுவையில் 2½ ஆண்டுகள் ஆட்சியை கடந்து வந்துள்ளோம். பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் அரசை நடத்தி வருகிறோம். பல்வேறு வகையிலும் ஏராளமான முட்டுக் கட்டைகள் போடப்படுகின்றன. அவற்றை யெல்லாம் முறியடித்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் வாங்கிய கடன்களை அடைத்துக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசின் மானியம் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. ஒரு காலத்தில் 70 சதவீதம் வரை மானியம் வழங்கிய நிலையில் இப்போது 26 சதவீதமாக குறைத்து விட்டார்கள்.

ஆனாலும் நிதி நிலைமையை சமாளித்து ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல சூழ்நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

விழாவில் குடிசை மாற்று வாரிய செயலாளர் ஜவகர், தலைமை செயல் அதிகாரி லாரன்ஸ் குணசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மடுகரையில் உள்ள வெங்கடசுப்பா ரெட்டி யார் சிலைக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்தார்.

Tags:    

Similar News