செய்திகள்

கோவை அருகே தனியார் கல்லூரி ஊழியர் வீட்டில் நகை திருட்டு

Published On 2018-12-17 10:32 GMT   |   Update On 2018-12-17 10:32 GMT
கோவை அருகே தனியார் கல்லூரி ஊழியர் வீட்டில் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவுண்டம்பாளையம்:

கோவை அருகே உள்ள கோவிந்த நாயக்கன் பாளையம் ஏ.ஜி. நகரை சேர்ந்தவர் தேவராஜ். தனியார் கல்லூரியில் லேப்-டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர் அதே கல்லூரியில் அலுவலக உதவியாளராக உள்ளார். இவர்களது மகன் விக்னேசும் அக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று 3 பேரும் கல்லூரிக்கு சென்று விட்டனர். மாலை 4 மணியளவில் விக்னேஷ் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது.

அதில் வைக்கப்பட்டு இருந்த 4 பவுன் செயின்,2 பவுன் மைனர் சங்கிலி, 2 பவுன் மோதிரம் ஆகியவை திருட்டு போய் இருந்ததை கண்டு திடுக்கிட்டனர். இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டு இதே போல் தேவராஜ் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு போய் இருந்தது.

அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை.

இந்த நிலையில் மீண்டும் திருட்டு நடைபெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News