செய்திகள்

நாகையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள விசைப்படகை தீவைத்து கொளுத்திய கும்பல்

Published On 2018-12-14 05:21 GMT   |   Update On 2018-12-14 05:21 GMT
நாகையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள விசைப்படகை மர்ம கும்பல் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம்:

நாகை கடுவையாற்று பகுதியில் மீன்பிடி படகுகளுக்கான கட்டுமான தளம் அமைந்துள்ளது.

இங்கு நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த சந்திரன் என்பவருக்கு சொந்தமான புதிய விசைப்படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த படகு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அப்போது அந்த வழியாக சென்ற மீனவர்கள் சிலர் படகு ஒன்று தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் படகில் பற்றிய தீயை அணைத்தனர்.

ஆனால் படகு முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. படகின் மேற்கூரை, படகில் இருந்த வலைகள் உள்ளிட்ட மீன்பிடி தளவாடங்கள், ஐஸ் பெட்டி என அனைத்தும் தீயில் கருகி நாசமானது. இதன் சேத மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.

இதுகுறித்து நாகை டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், மீன்பிடி படகிற்கு மர்ம நபர்கள் தீ வைத்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து படகிற்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? எதற்காக தீ வைத்தார்கள்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கஜா புயலால் ஏற்கனவே படகுகள் சேதமான நிலையில் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்த நிலையில் விசைப்படகை மர்ம கும்பல் தீ வைத்து கொளுத்திய சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News