செய்திகள்

விழுப்புரத்தில் நள்ளிரவில் காரை ஓட்டி வந்த 16 வயது மாணவர்களால் பரபரப்பு

Published On 2018-12-06 14:05 GMT   |   Update On 2018-12-06 14:05 GMT
விழுப்புரத்தில் நள்ளிரவில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 16 வயது மாணவர்கள் காரை ஓட்டி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்:

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் போலீசார் நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து நிறுத்தினர். காரில் 16 வயதுள்ள 2 மாணவர்கள் இருந்தனர். இதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். காரை சோதனை செய்தனர்.

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது மாணவர்கள் கூறும்போது,

எங்கள் 2 பேரின் மாமா ஸ்ரீதர் விழுப்புரத்தில் வசித்து வருகிறார். அவர் மற்றும் கார் உரிமையாளருடன் விழுப்புரத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நள்ளிரவில் வந்தோம். பின்னர் எங்கள் 2 பேரையும் காருக்குள் இருக்குமாறு கூறி விட்டு ஸ்ரீதர் மற்றும் கார் உரிமையாளர் ஆகியோர் ஓட்டலுக்கு சென்று விட்டனர். நாங்கள் காரை ஓட்ட ஆசைப்பட்டோம். இதனால் காரை அங்கிருந்து மாறி மாறி ஓட்டி வந்தோம் என்றனர்.

காரை சிறுவர்கள் ஓட்ட அனுமதியில்லை. எனவே இனிமேல் நீங்கள் கார் ஓட்ட கூடாது என்று மாணவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரித்து அனுப்பி வைத்தார்.

இதையடுத்து சிறுவர்களை தனியாக காரில் அமர வைத்து சென்ற ஸ்ரீதர் மற்றும் கார் உரிமையாளர் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களுக்கு அபராதம் விதித்தனர். இரவில் சிறுவர்கள் காரை ஓட்டிய சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News