செய்திகள்

மருவத்தூர் அருகே மாடுகள் திருடிய இருவர் கைது

Published On 2018-12-05 14:59 GMT   |   Update On 2018-12-05 14:59 GMT
மருவத்தூர் அருகே தோட்டத்தில் கட்டியிருந்த பசுமாடுகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அருகே உள்ள கல்பாடியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 65), விவசாய கூலி தொழிலாளி. இவர் தனது தோட்டத்தில் குடில் அமைத்து 2 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல் மாடுகளை கொட்டகையில் கட்டிவிட்டு வீடு திரும்பியுள்ளார். இன்று காலை சென்று பார்த்தபோது மாடு களை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். மேலும் அருகில் இருந்த தோட்டத்துக்காரர்களிடமும் விசாரித்துள்ளார்.

பின்னர் இது குறித்து மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதற்கிடையே மருவத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் பேரளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரண்டுபேர் மாடுகளை அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

அவர்களின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டவே, இருவரையும் அழைத்து விசாரித்தனர். அப்போது இருவரும் மாடுகளை திருடி வந்ததை ஒப்புக்கொண்டனர். இதற்கிடையே சின்னசாமியும் புகார் அளித்திருந்ததால் அவரின் மாடுகள் என உறுதி செய்யப்பட்டது.

பின்னர் மாடுகள் இரண்டையும் விவசாயி சின்னசாமியிடம் ஒப்படைத்தனர். மேலும் மாடுகளை நள்ளிரவில் திருடி அழைத்து சென்ற, பெரம்பலூர் புதூரை சேர்ந்த வேல்முருகன், நெடுவாசலை சேர்ந்த சிவராஜ் ஆகியோரை கைது செய்தனர். இருவரையும் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். நீதிபதி உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க அவரை அழைத்து சென்றனர். இரு மாடுகளும் தலா 50 ஆயிரம் வீதம், ரூ.ஒரு லட்சம் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. புகார் கொடுத்த சில மணி நேரங்களில் நடவடிக்கை எடுத்து மாடுகளை மீட்டு தந்த கால்துறையினருக்கு விவசாயி சின்னசாமி நன்றியை தெரிவித்தார்.
Tags:    

Similar News