செய்திகள்

திராவிடர் கழக பொருளாளர் பிறைநுதல் செல்வி மரணம்- தலைவர்கள் இரங்கல்

Published On 2018-12-05 11:00 GMT   |   Update On 2018-12-05 11:00 GMT
திராவிடர் கழக பொருளாளர் பிறைநுதல் செல்வி கார் விபத்தில் உயிரிழந்த சம்பவத்துக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

திராவிடர் கழக பொருளாளராக இருந்தவர் டாக்டர் பிறைநுதல் செல்வி(72).

உதகை மண்டலத்தில் மருத்துவ துணை இயக்குனராக பணிபுரிந்த இவர் விருப்ப ஓய்வு பெற்று திராவிடர் கழகத்தில் முழு நேரம் பணிபுரிந்தார். பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர் 2013-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதியில் திராவிடர் கழக பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்.

நேற்று காலை திருப்பூரில் இருந்து குன்னூரில் உள்ள வீட்டுக்கு பிறைநுதல் செல்வி தனது கணவர் டாக்டர் கவுதமனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் இவர்களுடைய கார் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பிறைநுதல் செல்வி மரணம் அடைந்தார்.

அவரது மரணத்துக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்து சென்னை திரும்ப விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தபோது நமது இயக்கக் கண்மணிகள், கொள்கைக் குன்றுகள், குன்னூர் டாக்டர் கவுதமனும், அவரது வாழ்விணையரும், திராவிடர் கழகப் பொருளாளருமான டாக்டர் பிறைநுதல் செல்வியும் விபத்துக்குள்ளானார்கள் என்ற செய்தி கிடைத்தது.

இதில் பிறைதுதல் செல்வி மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரைப் போல் ஒரு கொள்கைச்செல்வம், ஒரு பண்பாட்டின் உருவம், பாசத்தின் ஊற்று, ஒழுக்கம், தன்னடக்கத்தின் எழிற்கோல மனிதத்தை எளிதில் பார்க்க முடியாது. அவரை இழந்துவாடும் எனது கொள்கை உறவுக் குடும்பமே, ஆறுதல் கொண்டு துணிவுடன் அவர் தொண்டை தொடர ஆயத்தமாவோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:-

திராவிடர் கழகத்தின் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி அறிந்து துடிதுடித்துப் போனேன். அருமை சகோதரியாரை இழந்த துயரில் துடிக்கும் அவரது வாழ்க்கைத் துணைவர் டாக்டர் கவுதமனுக்கும் அவரது இலத்தவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் துயரம் தோய்ந்த உள்ளத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News