செய்திகள்

டாக்டர்களின் போராட்டத்தை நிறுத்த அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் - ஐகோர்ட்டு நீதிபதிகள்

Published On 2018-12-04 07:38 GMT   |   Update On 2018-12-04 07:38 GMT
டாக்டர்களின் போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். #DoctorsStrike #HC
சென்னை:

அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் அவசர செயற்குழு கூட்டம் கடந்த மாதம் நவம்பர் 28ந்தேதி திருச்சியில் நடந்தது.

அதில், மற்ற மாநிலங்களில் அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட, தமிழக அரசு டாக்டர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. அதனால் ஊதியம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அதிகரிக்க கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானம் இயற்றப்பட்டது.

அதில், டிசம்பர் 4ந் தேதி (இன்று) முதல் அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சிகிச்சை வழங்குவதை முழுமையாக நிறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது.

வருகிற 8ந்தேதி முதல் 13ந்தேதி வரை அனைத்து அறுவை சிகிச்சை வழங்குவதை நிறுத்துவது. 27ந்தேதி முதல் 29ந்தேதி வரை 3 நாள் தொடர் அடையாள வேலை நிறுத்தம் நடந்துவது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்களை இயற்றியது.

இதன்படி இன்று காலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் புறநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்காமல், டாக்டர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதையடுத்து மருத்துவர்களின் இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் பத்திரிகையாளர் வாராகி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசரமாக இன்றே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு வாராகி சார்பில் அவரது வக்கீல் முறையிட்டார்.

அப்போது நீதிபதிகள், ‘டாக்டர்கள் போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்’ என்று கருத்து தெரிவித்தனர். பின்னர், மனுதாரர் வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க முடியாது. வரிசையின் அடிப்படையில், அவரது வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். #DoctorsStrike #HC

Tags:    

Similar News