செய்திகள்

சத்தியமங்கலம் அருகே விபத்து- 19 அய்யப்ப பக்தர்கள் காயம்

Published On 2018-11-22 11:40 GMT   |   Update On 2018-11-22 11:40 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 19 அய்யப்ப பக்தர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #SathyamangalamAccident
சத்தியமங்கலம்:

திருவண்ணாமலை தேவிகாபுரத்தை சேர்ந்த 21 பேர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சுற்றுலா வேனில் புறப்பட்டனர்.

அவர்கள் அங்கு செல்லும் வழியில் பல கோவில்களுக்கு சென்றனர். அந்த வகையில் ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவிலுக்கும் வந்தனர்.

அவர்கள் அங்கு சாமி தரிசனம் செய்தனர். சாமி கும்பிட்டுவிட்டு இன்று காலை அங்கிருந்து சபரிமலைக்கு புறப்பட்டனர்.

சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம் அருகே அவர்கள் வந்த வேன் வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அங்கு மழை பெய்தது.

மழைக்கு நடுவே வந்த வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. கண் இமைக்கும் நேரத்தில் வேன் ரோட்டோரத்தில் கவிழ்ந்தது.

வேனில் இருந்த அய்யப்ப பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி அபய குரல் எழுப்பினர். விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இது பற்றி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேசுராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் வேனில் இருந்த சிவக்குமார் (வயது 37),சீனிவாசன் (38), ஆர்த்தி (10), பாபு, தர்ஷினி, முனியப்பன் (39), மணி (44), ஆகாஷ் (12), ஏழுமலை (32), கேசவன் (28), வெங்கடேஷ் (43) உள்பட 19 அய்யப்ப பக்தர்கள் காயம் அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மேல் சிகிச்சைக்காக 5 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  #SathyamangalamAccident
Tags:    

Similar News