செய்திகள்

திருப்பூர் அருகே பனியன் நிறுவன பஸ் கவிழ்ந்து 20 பேர் காயம்

Published On 2018-11-22 10:38 GMT   |   Update On 2018-11-22 10:38 GMT
திருப்பூர் அருகே பனியன் நிறுவன பஸ் கவிழ்ந்து 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பூர்:

திருப்பூர்- பல்லடம் சாலையில் தனியார் பனியன் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் பல்லடம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

அவர்களை பனியன் கம்பெனிக்கு சொந்தமான பஸ்சில் தினமும் வேலைக்கு அழைத்து வருவது வழக்கம்.

இன்று காலை பல்லடம் பகுதியில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனியன் நிறுவன பஸ்சில் வேலைக்கு வந்தனர்.

இந்த பஸ் திருப்பூர் -பல்லடம் சாலையில் குங்குமம் பாளையம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரம் தலை குப்புற கவிழ்ந்தது.

இதில் பஸ்சில் பயணம் செய்த 20 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களது தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டது. அவர்கள் வலியால் அலறி துடித்தனர்.

இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு திருப்பூர், பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்து காரணமாக திருப்பூர் -பல்லடம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News