செய்திகள்

அடுத்த பிரதமர் யார்? - தமிழகத்தில் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவு

Published On 2018-11-20 05:14 GMT   |   Update On 2018-11-20 05:14 GMT
மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்து கணிப்பை தந்தி தொலைக்காட்சி தமிழகத்தில் நடத்தியது. அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன. #ThanthiTV #ThanthiTvopinionPoll
சென்னை:

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாரதிய ஜனதா கட்சி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

ஆனால் பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை பறிக்க காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்து இப்போதே பிரசாரத்தை தொடங்கி விட்டார்கள். இதனால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே நேரடி பலப்பரீட்சை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்து கணிப்பை தந்தி தொலைக்காட்சி தமிழகத்தில் நடத்தியது. அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமா? என்று கருத்து கணிப்பில் கேட்கப்பட்டது. அதற்கு ஆட்சி மாற்றம் வேண்டும் என்று 71 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.

ஆட்சி மாற்றம் வேண்டாம் என்று 13 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர் தேர்தல் வரும்போது முடிவு செய்து கொள்ளலாம் என்ற மனநிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.


அடுத்த பிரதமராக யார் வரவேண்டும்? என்ற கேள்விக்கு 19 சதவீதம் பேர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்று 36 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.

ஆனால் மோடி-ராகுல் இருவரும் வேண்டாம் என்று பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். 3-வது நபர் ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்று 45 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க.-அ.ம.மு.க. இணையுமா? என்ற கேள்விக்கு இணையும் என்று 25 சதவீதம் பேரும், இணையாது என்று 45 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். பின்னர் இணையலாம் என்று 30 சதவீதம் பேர் கருத்து கூறி உள்ளனர். #ThanthiTV #ThanthiTvopinionPoll
Tags:    

Similar News