செய்திகள்

வழக்கு முடிந்ததும் 8 வழி சாலை பணிகள் தொடங்கும்- எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published On 2018-11-18 11:01 GMT   |   Update On 2018-11-18 11:01 GMT
வழக்கு முடிந்ததும் 8 வழி சாலை பணிகள் தொடங்கும் என்று சேலத்தில் மேம்பாலத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #cmedappadipalanisamy #chennai salemgreenexpressway

சேலம்:

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரும்பாலை மெயின்ரோடு பிரிவில் சேகோசர்வ் எதிரில் ரூ. 22 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசியதாவது:-

8 வழிச்சாலை அமைப்பதற்கு நாம் முயற்சித்தோம். அது இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. பல பேர் நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறார்கள். நீதிமன்றத்தினுடைய வழக்கு முடிந்த பிறகு அந்த பணிகள் தொடங்கும்.சில பேர் 8 வழிச்சாலை சேலத்திற்கு தான் கொடுக்கிறார்கள் என்று சொல்கின்றனர். சேலம் வழியாகத்தான் இந்த சாலை செல்கிறது அவ்வளவு தான்.

இன்றைக்கு கோவையாக இருந்தாலும் சரி, கேரளாவாக இருந்தாலும் சரி, திருப்பூர், ஈரோடு, மதுரை, கரூர், திண்டுக்கல், நாமக்கல்லாக இருந்தாலும் சரி சென்னைக்கு போக வேண்டும் என்றால் சேலம் வழியாகத்தான் போக வேண்டும். சேலத்துக்கு மட்டும் தான் 8 வழிச்சாலை என்று தவறான கருத்தை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

முதல்-அமைச்சர் சேலத்தில் இருக்கிறார். அதனால் தான் சேலத்திற்கு 8 வழிச்சாலை கொடுத்தார் என்று சொல்கிறார்கள். எனக்கென்ன 10 தொழிற்சாலையா? சேலத்தில் ஓடிக் கொண்டி ருக்கிறது. 8 வழிச்சாலை போடுவதற்கு. ஒரு தவறான கருத்தை வைத்து எதிர்க்கட்சிகள் எல்லாம் தவறான விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறது.

நாளுக்கு நாள் வாகனத்தின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. கனரக வாகனம் அதிகமாக போயிக் கொண்டு இருக்கின்றது. இதனால் சாலையின் தேவையும் அதிகரிக்கின்றது. புதிய சாலைகள் அமைக்க வேண்டும். சாலைகள் விரிவுபடுத்த வேண்டும். அப்படி இருந்தால் தான் நாம் விபத்து இல்லாத பயணம் மேற்கொள்ள முடியும்.

இந்த 8 வழிச்சாலை அமைக்கின்றபோது கிட்டத்தட்ட 70 கிலோ மீட்டர் மிச்சமாகும். இதனால் எரிபொருள் மிச்சமாகும். மாசு ஏற்படுவது தவிர்க்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். நேரமும் குறைகிறது. பயண நேரம் மிச்சமாகிறது. அதுமட்டுமல்ல அந்த சாலைகள் விபத்து இல்லாத சாலையாக தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படும்.

இப்படிப்பட்ட சாலையை அமைக்கப்படும்போது தான் புதிய புதிய தொழிற்சாலைகள் வரும். இதனால் பொருளாதாரம் மேம்பாடு அடையும். வேலை வாய்ப்பு கிடைக்கும். மக்களுக்கு தேவையான பொருளாதார வசதி கிடைக்கும்.

இப்படிப்பட்ட ஒரு நலத்திட்டங்கள் வருகின்றபோது பொதுமக்கள் வரவேற்க வேண்டும். அப்படி வரவேற்றால் தான் நம்முடைய நாடு முன்னுக்கு வர முடியும். வெளி நாடுகள் விரைவு சாலைகளால் தொழில் வளம் பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். #cmedappadipalanisamy #chennai salemgreenexpressway

Tags:    

Similar News