செய்திகள்
மின்கம்பம் மீது மரம் சாய்ந்து விழுந்துள்ளது.

கஜா புயலால் 400 மின்கம்பங்கள் சேதம் - இருளில் மூழ்கிய காரைக்குடி

Published On 2018-11-17 10:24 GMT   |   Update On 2018-11-17 10:24 GMT
கஜா புயல் தாக்குதலில் 400 மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் இருளில் மூழ்கின. #GajaCyclone
காரைக்குடி:

கஜா புயலால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் சிவகங்கை மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தில் காரைக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை புயல் புரட்டிப் போட்டுள்ளது.

காரைக்குடி பொன் நகர், வள்ளலார் நகர், இலுப்பக்குடி, கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் மின் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

சுமார் 400-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததால் நேற்று அதிகாலை 3 மணியளவில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாததால் மக்கள் விடிய விடிய அவதிக்குள்ளானார்கள். இன்று காலையும் மின் இணைப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அனைத்து மின் கம்பங்களையும் சீரமைத்த பிறகே மின் இணைப்பு வழங்கப்படும் என்றனர். இதனால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மாவட்டத்தில் வருவாய்த் துறையினர், பொதுப் பணித்துறையினர், மின் வாரிய அமைப்பினர் என அனைத்து துறையினரும் மீட்பு நடவடிக்கைகளில் முழு வீச்சில் இறங்கி உள்ளனர். ஆனாலும் பல இடங்களில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் இன்னும் சீர்செய்யப்படவில்லை.

இதன் காரணமாக சிவகங்கை மாவட்ட பள்ளி கல்லூரிளுக்கு இன்றும் விடுமுறை அறிவித்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளின் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாகவும், தேர்வு எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பதிவாளர் குருமல்லேஷ்பிரபு அறிவித்துள்ளார்.

புயல் கரையை கடந்த போது வீசிய பலத்த காற்றில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரங்கள் சாய்ந்ததில் வள்ளலார் தெரு, பொன் நகர் பகுதி யில் பல வீடுகளின் காம்ப வுண்டு சுவர்கள் இடிந்து சேதமடைந்தன. பொன் நகரில் தோட்டத்தில் இருந்த 15 தேக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன. கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள காரைக்குடியில் தொடர்ந்து மீட்பு பணிகளில் அதிகாரிகள் வேகம் காட்டி வருகின்றனர்.  #GajaCyclone



Tags:    

Similar News