செய்திகள்

கஜா புயல் தாண்டவத்தால் மண் சரிவில் சிக்கி தொழிலாளர்கள் 4 பேர் பலி

Published On 2018-11-17 05:16 GMT   |   Update On 2018-11-17 05:16 GMT
கொடைக்கானலில் கஜாபுயல் தாண்டவத்தால் மண் சரிந்து 4 தொழிலாளர்கள் உயிரோடு புதைந்து பலியாகினர். #Gajastorm

கொடைக்கானல்:

தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயல் கொடைக்கானலில் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு 1,700-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

நகர் முழுவதும் நேற்று காலை முதல் இருளில் மூழ்கியது. இதனால் தொலை தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

கொடைக்கானலில் இருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ள சின்ன பள்ளம் பகுதியில் ரவி, ராஜேந்திரன், சவுந்தரராஜன், கார்த்திக் ஆகிய 4 வெளி மாவட்ட கட்டிட தொழிலாளர்கள் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர்.


இப்பகுதியில் பெய்த கன மழையினால் வீட்டின் சுவர் சேதமடைந்தது. இன்று காலையில் மண் சரிவு ஏற்பட்டதால் அவர்கள் தங்கி இருந்த வீடு மண்ணில் புதைந்தது. இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து கொடைக்கானல் போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆனால் வரும் வழியில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து அவை அப்புறப்படுத்தப்படாமல் இருந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. மோட்டார் சைக்கிளில் கூட சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் 6 கி.மீ தூரம் நடந்தே சம்பவ இடத்துக்கு வந்தனர். வீடு பாதிக்கும் மேல் மண்ணில் புதைந்ததால் அருகில் உள்ள பகுதியில் மண்ணை தோண்டி வீட்டுக்குள் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர்கள் 4 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் தெரியவில்லை. பலியான 4 பேர்களையும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருகின்றனர். கஜா புயல் தாண்டவத்தால் கொடைக்கானலில் 4 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm

Tags:    

Similar News