செய்திகள்

பாளையில் இன்று ரெயில் மோதி ஆசிரியர் பலி

Published On 2018-11-13 05:37 GMT   |   Update On 2018-11-13 05:37 GMT
பாளையில் இன்று ரெயில் மோதி ஆசிரியர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை:

பாளை பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது48). இவர் திருக்குறுங்குடியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுபாஷினி (40), ஆலங்குளம் அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு வர்ஷினி (15) என்ற 10-ம் வகுப்பு படிக்கும் மகளும், விக்னேஷ் (12) என்ற 7-ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். ஆசிரியர் முருகன் தினமும் காலை ‘அரை டவுசர், டீசர்ட்’ அணிந்து வாக்கிங் செல்வார்.அதுபோல் இன்று பெருமாள்புரத்தில் இருந்து ரெயில்வே பீடர் ரோடு வழியாக மகாராஜநகர் வரை ‘வாக்கிங்’ சென்றார்.

பின்பு அவர் அன்புநகர் மகாராஜநகர் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து மறுபுறம் செல்ல முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்ற ‘செந்தூர் எக்ஸ்பிரஸ்’ ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆசிரியர் முருகன் மீது மோதியது. இதில் முருகன் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். ரெயில் என்ஜின் டிரைவர் இதை கவனித்து உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

சம்பவ இடத்துக்கு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீலியஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

முருகன் உடல் வைக்கப்பட்டுள்ள நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த அவரது மனைவி சுபாஷினி மற்றும் குழந்தைகள், உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்து காரணமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் ½ மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. அதுவரை தியாக ராஜ நகர் ரெயில்வே கேட் திறக்கப்படாததால் ஏராளமான வாகன ஓட்டிகளும் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

Tags:    

Similar News