செய்திகள்

கஜா புயலை எதிர்கொள்ள தயார்: புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி

Published On 2018-11-12 07:58 GMT   |   Update On 2018-11-12 07:58 GMT
புதுவை அரசு நிர்வாக எந்திரம் கஜா புயலை எதிர் கொள்ள தயாராக உள்ளதாக அம்மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #Narayanasamy #GajaCyclone #Gaya
புதுச்சேரி:

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளது.

‘கஜா’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல் கடலூர், ஸ்ரீஹரிகோட்டா இடையில் 14-ந்தேதி கரையை கடக்கும். இதனால் தமிழகம், புதுவையில் 12 முதல் 15-ந்தேதிவரை பலத்த காற்றும், கனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது.

புதுவையிலும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

புதுவை அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயல் காரணமாக தமிழகம், புதுவையில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர பகுதியில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் நானும், அமைச்சர் ஷாஜகானும் அனைத்துத்துறை அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தினோம்.

அப்போது புதுவை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தி பொதுமக்கள் புகார்களுக்கு உடனடியாக தீர்வுகாண உத்தரவிட்டோம். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், செயலாளர்கள், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி, வருவாய், மீன், கல்வி, மருத்துவம், மின்சாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

புதுவையில் தாழ்வான பகுதிகள், தண்ணீர் தேங்கும் பகுதிகளில் உள்ள மக்களை மழைக்காலத்தில் அங்கிருந்து அகற்றி சமுதாய கூடம், பள்ளிக்கூடம் போன்ற பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மக்களை உடனே நிவாரண முகாம்களுக்கு அழைத்துச்செல்வர். பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தேங்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுப்பார்கள். பள்ளிகளில், சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு குடிமைப் பொருள் வழங்கல்துறை மூலம் உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


அமைச்சர் ஷாஜகான் இன்றும், நாளையும் அனைத்துத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்கவுள்ளார்.

புதுவை அரசு ஏற்கனவே கால்வாய்களை தூர்வாரியுள்ளது. நகர பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்ளை தூர்வாரவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் மோட்டார் மூலம் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுவையில் தண்ணீர் தேங்கும் இடங்களான கிருஷ்ணாநகர், பாவாணர் நகர், இந்திராகாந்தி சதுக்கம், ராஜீவ்காந்தி சதுக்கம், நெல்லித்தோப்பு, சுப்பையா சிலை ஆகிய பகுதியில் தேங்கும் நீரை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவத்துறை சார்பில் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க மருந்துகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக புதுவை அரசு கஜா புயலை சமாளிக்கவும், பேரிடர் வராமல் தடுக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

புதுவை அரசு நிர்வாக எந்திரம் கஜா புயலை எதிர் கொள்ள தயாராக உள்ளது. இருப்பினும் அதிக வெள்ளம் ஏற்பட்டால் தேசிய பேரிடர் மீட்புக்குழுவை அணுகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். #Narayanasamy #GajaCyclone #Gaya
Tags:    

Similar News