செய்திகள்

கடலூரில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலி

Published On 2018-11-05 08:26 GMT   |   Update On 2018-11-05 08:26 GMT
கடலூரில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் அந்தப் பகுதியில் வேறு யாருக்காவது மர்ம காய்ச்சல் உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. #Mysteryfever
கடலூர்:

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினமும் 300-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். அரசு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருகை அதிகரித்து உள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் இதுவரை 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதேபோல் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேர் புதுவை மற்றும் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் மர்ம காச்சலுக்கு கடலூரில் வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளார். இதுபற்றிய விபரம் வருமாறு:-

கடலூர் புருகீஸ்பேட்டையை சேர்ந்தவர் விமல் (வயது 33). இவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்தது. இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் கீதா உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ குழுவினர் கடலூர் புருகீஸ்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கி வருகின்றனர்.

மேலும் அந்தப் பகுதியில் வேறு யாருக்காவது மர்ம காய்ச்சல் உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. #Mysteryfever

Tags:    

Similar News