செய்திகள்

மானாமதுரை ரெயில்நிலையத்தில் பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய பாதுகாப்பு படையினர்

Published On 2018-11-04 16:19 GMT   |   Update On 2018-11-04 16:19 GMT
மானாமதுரை ரெயில்நிலையத்தில், பாதுகாப்பான பயணம் குறித்து ரெயில்வே பாதுபடையினர் பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மானாமதுரை:

மானாமதுரை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பான பயணம் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாட்டுப்பாடி, தாளம் தட்டி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை எடுத்து செல்வது குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் மொய்தீன் உத்தரவுப்படி மானாமதுரை ரெயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் ரெயில்வே போலீசார், பயணிகளிடம் பாரம்பரிய முறைப்படி வேட்டி, தலைப்பாகை அணிந்து தண்டோரா போட்டு ஆடலுடன் பாட்டுப்பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அவர்கள் ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களை கொண்டு செல்ல கூடாது, ரெயில்நிலையத்தில் சந்தேகப்படும்படி பொருட்கள் இருந்தால் அதை போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும், விதிகளை மீறி பட்டாசு கொண்டு சென்றால் வழக்கு பதிவு செய்யப்படும் என்பதை பாட்டுப்பாடி பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நேற்று மதியம் மானாமதுரை வழியாக சென்ற ரெயில் பயணிகள், ரெயில்வே பாதுகாப்பு படையினரின் வித்தியாசமான விழிப்புணர்வு பிரசாரத்தை ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.
Tags:    

Similar News