செய்திகள்

16 பறக்கும் படை அமைப்பு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களில் சோதனை

Published On 2018-11-02 10:50 GMT   |   Update On 2018-11-02 10:50 GMT
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் 16 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. #Omnibuses

சென்னை:

தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண் டாட செல்லும் பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ், ரெயில்கள் விடப்பட்டுள்ளன. ஆம்னி பஸ்களிலும் இடங்கள் நிரம்பி வழிகிறது. தமிழகத்தில் 1100 ஆம்னி பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன.

பண்டிகை கால கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் பலமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தைவிட 3 மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு சில ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் ஆன்லைனில் வெளிப்படையாக கூடுதல் கட்டணம் நிர்ணயித்து பொதுமக்களிடம் வசூலித்து வருகின்றனர்.

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கோயம்பேடு ஆம்னி பஸ்நிலையம், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி, கிழக்கு கடற்கரை சாலை சுங்கசாவடி, ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிலையம் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்கிறார்கள்.

இன்று (வெள்ளிக் கிழமை) 3,4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் தீவிர சோதனை செய்கின்றனர். 4 நாட்களிலும் 4 குழுக்கள் வீதம் 16 குழுக்கள் நியமிக்கப்பட்டு கூடுதல் கட்டணம், பெர்மிட் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கின்றனர். இதுகுறித்து அமலாக்கப் பிரிவு இணை ஆணையர் முத்து கூறியதாவது:-

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும். 4 பஸ் நிலையங்களிலும் 4 நாட்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த பஸ் சிறை பிடிக்கப்படும். ஆன்லைனில் அதிக கட்டணம் குறிப்பிடப்பட்டு இருந்தாலும் சம்பந்தப்பட்ட பஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது.

அதனால் பஸ்சில் பயணம் செய்யும் போது அதிக கட்டணம் வசூலித்தது குறித்து புகார் தெரிவித்தால் கூடுதல் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும். மேலும் பெர்மிட் இல்லாமலும் இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார். #Omnibuses

Tags:    

Similar News