செய்திகள்

சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு

Published On 2018-11-02 10:41 GMT   |   Update On 2018-11-02 10:41 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தை ஒத்திவைத்தனர். #MiddayMealWorkers
சென்னை:

காலமுறை ஊதியம், ஓய்வூதிய உயர்வு, பணிக்கொடை உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் கடந்த 29-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கினர். அவர்களுடன் அங்கன்வாடி பணியாளர்களின் பல்வேறு சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் சத்துணவு பணி பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, போராட்டம் நடத்திய சங்க நிர்வாகிகளுடன் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் போராட்டம் நீடித்தது.

இந்நிலையில் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் இன்று 5வது நாளாக தொடர்ந்தது. பள்ளிக்குழந்தைகளின் நலனை கருதி சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அமைச்சர் சரோஜா வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து சத்துணவு ஊழியர்களுடன் சமூக நலத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. 

சத்துணவு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து போராட்டத்தை ஒத்திவைப்பதாக சத்துணவு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. #MiddayMealWorkers
Tags:    

Similar News