செய்திகள்

லாரி-பஸ் மோதல்: டிரைவர் உள்பட 12 பேர் காயம்

Published On 2018-10-31 20:27 IST   |   Update On 2018-10-31 20:27:00 IST
லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேப்பனஅள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா மேலுமலை முதல் கோபசந்திரம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் விபத்துக்களில் முதல் இடம் பிடிக்கும் விபத்து பகுதியாக இந்த பகுதி உள்ளது. இந்த பகுதியில் விபத்து நடக்காத நாட்களே இல்லை.

பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ் இன்று காலை 6.30 மணி அளவில் விபத்தில் சிக்கியது. பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் முன்னால் சென்ற லாரி மீது இந்த பஸ் மோதி விட்டது. இந்த விபத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த டிரைவர் அசோக்குமார் (வயது42), மூர்த்தி (38) மற்றும் பயணிகள் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட லாரிகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. லாரிகளை தாறுமாறாக ஓட்டிவரும் டிரைவர்கள் திடீரென்று பிரேக் போடுவதால பின்னால் வரும் வாகனங்கள் லாரி மீது மோத வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. 

மேலும் ரோட்டின் ஓரத்திலும் லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி இருப்பதாலும் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. லாரி ஓட்டும் டிரைவர்கள் செல்போனில் படம் பார்த்து கொண்டும், பாட்டு கேட்டுக் கொண்டும் செல்வதால் பின்னால் எந்த வாகனங்கள் வருகிறது என்பதை கவனிக்காமல் ஓட்டிச் செல்வதும் விபத்துக்கு காரணமாகிறது.
Tags:    

Similar News