செய்திகள்

டெங்கு கொசுக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2018-10-31 09:42 GMT   |   Update On 2018-10-31 09:42 GMT
டெங்கு கொசுக்கள் ஒரு நாளைக்கு 1,500 முட்டையிடும். அதனை சாதாரணமாக நினைக்காமல் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #MinisterVijayabaskar #Dengue
போரூர்:

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வேலை பார்த்து வரும் தொழிலாளிகளுக்கு நில வேம்பு கசாயம் வழங்கும் விழா மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் இன்று காலை கோயம்பேடு மார்கெட் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு தொழிலாளிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கோயம்பேடு மார்கெட் மேனேஜிங் கமிட்டி நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, கோயம்பேடு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி. ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

அடுத்த கட்டமாக அரசு சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் அளிக்க இருக்கிறோம். டெங்கு காய்ச்சலுக்கு அனைத்து அரசு மருத்துவமனையிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும். காய்ச்சலால் மரணம் என்பது முக்கியமாக தடுக்கப்பட வேண்டும்.

டெங்கு காய்ச்சல் வந்தால் 5-ல் இருந்து 7 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து 1,200 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.



ஒரு கொசு 21 நாள் உயிர் வாழும். கொசு ஒரு நாளைக்கு 1,500 முட்டையிடும். அதனால் அதனை சாதாரணமாக நினைக்கக்கூடாது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள காய்கறி சங்கங்கள் அல்லது கூட்டமைப்பு எந்த உதவியாக இருந்தாலும் தெரிவிக்கலாம். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆண்டு 5 லட்சம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய பெருமை வணிகர் சங்கங்களையே சாரும். காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும். காய்ச்சலால் ஒருவர் இறப்பதை அரசு அனுமதிக்காது.

கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்கிறோம். மருத்துவமனை அமைக்க இடம் தாருங்கள். மருத்துவமனையை அமைத்து தருகிறோம். அதுவரை தினமும் 2 மருத்துவ முகாம் அமைக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நடமாடும் மருத்துவ வாகனத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் கோயம்பேட்டில் உள்ள காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். #MinisterVijayabaskar #Dengue

Tags:    

Similar News