செய்திகள்

ஐகோர்ட்டுக்கு வழங்கி வரும் பாதுகாப்பு மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பு

Published On 2018-10-31 08:31 GMT   |   Update On 2018-10-31 08:31 GMT
சென்னை ஐகோர்ட்டுக்கு அளிக்கப்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் (சி.ஐ.எஸ்.எப்.) பாதுகாப்பை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MadrasHC
சென்னை:

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கோர்ட்டு அறையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி மதுரையை சேர்ந்த வக்கீல்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அப்போதைய தலைமை நீதிபதியும், தற்போதைய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியுமான சஞ்சய்கி‌ஷன் கவுல், இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.

பின்னர் இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. பின்னர், ஐகோர்ட்டுக்கு தமிழக போலீசாரால் உரிய பாதுகாப்பு வழங்க முடியவில்லை. அதனால், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டனர். இதற்காக ஆண்டுக்கு ரூ.64 கோடியை தமிழக அரசு, மத்திய பாதுகாப்பு படையினருக்கு வழங்கவேண்டும் என்றும் உத்தரவில் நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 16ந்தேதி முதல் ஐகோர்ட்டுக்கு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இந்த பாதுகாப்பை ஒவ்வொரு ஆண்டும் நீட்டித்து ஐகோர்ட்டு முதல் அமர்வு உத்தரவிட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தஹிலரமானி, நீதிபதி துரைசாமி ஆகியோர் கொண்ட முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐகோர்ட்டுக்கு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வழங்கி வரும் பாதுகாப்பை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டித்து உத்தரட்டனர். #MadrasHC
Tags:    

Similar News