செய்திகள்

புளியந்தோப்பில் கடத்தப்பட்ட மாணவன் மீட்பு - 2 பெண்கள் கைது

Published On 2018-10-30 09:31 GMT   |   Update On 2018-10-30 09:31 GMT
சென்னை புளியந்தோப்பு அருகே சிறுவனை கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்:

புளியந்தோப்பு போகிப் பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்-துர்கா தேவி தம்பதியின் மகன் அஜய் (3).அதேபகுதியில் உள்ள மாநகராட்சி உருது படித்து வந்தான். நேற்று காலை பள்ளிக்கு சென்றான்.

அப்போது பள்ளிக்கு வந்த ஒரு பெண் தான் சிறுவனின் அத்தை தேவி என்று கூறி மாணவனை அழைத்தார். இதை உறுதி செய்வதற்காக தன்னிடம் இருந்த போனில் சிறுவனின் தாய் பேசுவதாக ஆசிரியையிடம் தெரிவித்தார்.

அதில் பேசிய பெண், தன் மகன் அஜய்யை அத்தையுடன் அனுப்பி வைக்கும்படி கூறினார். இதை நம்பிய ஆசிரியை மாணவன் அஜய்யை அந்த பெண்ணுடன் அனுப்பி வைத்தார்.

மாலையில் மகன் அஜய் வீடு திரும்பாததால் உறவினர் வீடுகளில் தாயும், தந்தையும் தேடினார்கள். பள்ளிக்கு சென்று கேட்ட போது பையனின் அத்தை தேவி என்று கூறி அழைத்து சென்றதை தெரிவித்தனர். 2 பெண்கள் சேர்ந்து மாணவனை கடத்தியது தெரியவந்தது.

இதுகுறித்து புளியந்தோப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். பள்ளியின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது பள்ளிக்கு வந்த பெண் ஏற்கனவே பிரகாஷ் வீட்டில் கூலிவேலை செய்த குட்டியம்மாள் என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு 1 மணி அளவில் அந்த பெண் வசிக்கும் வியாசர்பாடி கணேசபுரத்துக்கு போலீசார் சென்றனர்.

அங்கு குட்டியம்மாள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோவில் சிறுவன் அஜய் தூங்கிக் கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே சிறுவனை மீட்டனர்.

அவனை கடத்தி வந்த குட்டியம்மாள் (38), அவருடைய மகள் ஐஸ்வர்யா (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பெண்ணிடம் விற்பதற்காக சிறுவன் அஜய்யை குட்டியம்மாளும் அவருடைய மகள் ஐஸ்வர்யாவும் கடத்தியது தெரிய வந்தது.மீட்கப்பட்ட சிறுவன் அஜய்யை பெற்றோரிடம் புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ரவி ஒப்படைத்தார்.

Tags:    

Similar News