செய்திகள்

சங்கராபுரம் பகுதியில் பலத்த மழை - மின்னல் தாக்கி பெண் பலி

Published On 2018-10-22 23:43 IST   |   Update On 2018-10-22 23:43:00 IST
சங்கராபுரம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
சங்கராபுரம்:

வங்க கடல் பகுதியில் மேலடுக்கு காற்றழுத்த சுழற்சி தொடர்ந்து நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று காலை சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள வளையாம்பாட்டு கிராமத்தில் நேற்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. மதியம் 1.30 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது.

இதற்கிடையே சங்கராபுரம் அருகே உள்ள வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த நல்லாசாமி மனைவி நீலாவதி (வயது 65) என்பவர், நேற்று காலை தனக்கு சொந்தமான 3 பசுமாடுகளை அருகில் உள்ள விளைநிலத்துக்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றார். அப்போது இடி-மின்னலுடன் மழை பெய்ததால், தனது பசுமாடுகளுடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். ஏரிக்கரை அருகே வந்த போது, திடீரென நீலாவதி மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த வளையாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர்(பொறுப்பு) ராஜேந்திரன் மற்றும் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் இறந்த நீலாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
Tags:    

Similar News