செய்திகள்

ராசிபுரம் அருகே மர்ம காய்ச்சல் - பாதிக்கப்பட்ட 2 கிராமங்களில் மருத்துவ குழுவினர் முகாம்

Published On 2018-10-20 18:03 GMT   |   Update On 2018-10-20 18:03 GMT
ராசிபுரம் அருகே, மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 கிராமங்களில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டது.
ராசிபுரம்:

ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டி புதூர் ஊராட்சியில் கூனவேலம்பட்டி, பாலப்பாளையம், பெரும்பாலி உள்பட 9 கிராமங்கள் உள்ளன. கூனவேலம்பட்டிபுதூர் மற்றும் பாலப்பாளையம் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் நெசவு மற்றும் விவசாயி கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதற்கு அவர்கள் சிகிச்சை அளித்தும் சரிவர பலன் இல்லை. மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என மக்கள் மத்தியில் கருத்து இருந்தது.

இதையொட்டி மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவின்பேரில் ராசிபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தி, தனபால், ராசிபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி தலைமையில் பிள்ளாநல்லூர் சமுதாய சுகாதார நிலையத்தின் மருத்துவர்கள் ஜெயப்பிரகாஷ், கோபி, பிரணவ், சித்தா டாக்டர் பாலாமணி மற்றும் நோய் தடுப்பு நிபுணர் டாக்டர் மோகனவேல், மாவட்ட நுண்ணுயிரியல் துறை டாக்டர் மோகனசுந்தரி, சுகாதார பணியாளர்கள் உள்பட மருத்துவ குழுவினர் கூனவேலம்பட்டி புதூர், பாலப்பாளையம் ஆகிய 2 கிராமங்களில் 2 நாட்கள் முகாமிட்டு பொதுமக்கள் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. நடமாடும் மருத்துவமனையும் செயல்பட்டது.

மேலும் 30 சுகாதார பணியாளர்கள் வீடுகள் மற்றும் தெருக்களில் கொசு மருந்து அடித்தனர். டெங்கு கொசு புழு அழிப்பு, அபேட் மருந்து அடிக்கும் பணி முழு வீச்சில் நடந்தன. டாக்டர் செல்வி தலைமையில் சுகாதார துறையினர் வீடு வீடாக சென்று தேவையில்லாத டப்பாக்கள், பாத்திரங்களில் உள்ள தண்ணீரில் கொசு புழுக்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றை அப்புறப்படுத்தும்படி அறிவுறுத்தினர். சுகாதார துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் முகாமை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

2 நாட்கள் நடந்த முகாமில் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுவரை நடந்த முகாமில் டெங்கு மற்றும் சிக்குன் குனியா காய்ச்சல் இருப்பதாக தெரியவில்லை. வைரஸ் காய்ச்சல் வந்தாலே கை, கால்கள் வலி எடுக்கும். எனவே இதை வைத்து சிக்குன்குனியா காய்ச்சல் என்று தீர்மானிக்க கூடாது என டாக்டர்கள் தெரிவித்தனர். 15-க்கும் மேற்பட்டவர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. வைரஸ் காய்ச்சல் சிலருக்கு ஏற்பட்டுள்ளது என்றும் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News