செய்திகள்

வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு - அந்தமான் கடலில் காற்றழுத்தம் உருவாகிறது

Published On 2018-10-20 08:51 GMT   |   Update On 2018-10-20 08:51 GMT
அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Northeastmonsoon
சென்னை:

தமிழகத்தையொட்டி தென்கிழக்கு மற்றும் அதனையொட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதேபோல் கேரளாவையொட்டி கிழக்கு மத்திய அரபிக்கடலில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.



இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் கனமழை பெய்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரிய குளத்தில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது. கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் 10 செ.மீ., மழை, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 6 செ.மீ., சங்கரன்கோவிலில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர், மேட்டுப்பாளையம், சிதம்பரம், தக்கலை ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ., கழுகுமலை, விருதுநகர், நாகர்கோவில், திருச்செங்கோடு, ராஜபாளையம், போடி, மணியாச்சியில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

தென்மேற்கு பருவ மழை வடநாட்டின் பல பகுதிகளில் வாபஸ் ஆகிவிட்ட நிலையில் எஞ்சியுள்ள ஒருசில இடங்களில் இன்று விலகிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

24 மணி நேரத்தில் அதன் பிறகு வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதற்கிடையே தாய்லாந்து வளைகுடாவில் நிலவும் மேலடுக்கு சுழற்சியானது. வடக்கு அந்தமான் கடல் வரை பரவி இணைந்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Northeastmonsoon

Tags:    

Similar News