செய்திகள்

நாமக்கல்லில் வீட்டில் வைத்திருந்த 292 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்- அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2018-10-17 16:46 GMT   |   Update On 2018-10-17 16:46 GMT
நாமக்கல்லில் வீட்டில் திறந்தவெளியில் வைத்திருந்த 292 கியாஸ் சிலிண்டர்களை வட்ட வழங்கல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல்:

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 70). இவரது வீட்டில் சுற்று சுவருக்குள் பாதுகாப்பு இன்றி, திறந்த வெளியில் கியாஸ் சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வட்ட வழங்கல் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாமக்கல் வட்ட வழங்கல் துறை அதிகாரி சந்திரமாதவன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கியாஸ் சிலிண்டர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது நாமக்கல் அருகே உள்ள வேலகவுண்டம்பட்டியில் தனியார் கியாஸ் ஏஜென்சி நடத்தி வரும் வீரப்பன் குடும்பத்தினர் உரிமம் பெறாத இடத்தில் கியாஸ் சிலிண்டர்களை வைத்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கியாஸ் நிரப்பப்பட்ட 95 சிலிண்டர்கள் உள்பட மொத்தம் 292 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி முன்னிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக வழங்கல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வீட்டின் அருகே அய்யம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News