செய்திகள்

ரேசன் கார்டு கேட்டு குழந்தையுடன் பெண் தர்ணா

Published On 2018-10-16 10:07 GMT   |   Update On 2018-10-16 10:07 GMT
ரேசன் கார்டு கேட்டு குழந்தையுடன் பெண் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. #Rationcard

சென்னை:

சென்னையில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம், தர்ணா என்றால் நூறு பேராவது திரண்டு இருப்பதைத்தான் பார்க்க முடியும்.

ஆனால் மைலாப்பூரில் இளம்பெண் ஒருவர் தனது குழந்தையுடன் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்து அந்த பெண்ணை அப்புறப்படுத்துவதற்காக போலீசார் விரைந்து வந்தனர்.

தர்ணாவில் ஈடுபட்ட அந்த பெண்ணின் பெயர் மனோன்மணி (34). நொச்சிக் குப்பத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனோன்மணி அதே பகுதியில் வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

இதையடுத்து தனது ரே‌ஷன் கார்டை புதிய முகவரிக்கு மாற்றித் தரும்படி கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார். அதற்கு தேவையான ஆவணங்கள், ஆதார் கார்டு எல்லாவற்றையும் சமர்ப்பித்து இருக்கிறார். அதிகாரிகளும் அதை சரி பார்த்து விட்டு விரைவில் கார்டு வந்து விடும் என்று கூறி இருக்கிறார்கள்.

ரேசன் கடைகளில் பொருட்களை வாங்கி சாப்பிடும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மனோன்மணி ரேசன் கார்டு கிடைக்காததால் மிகவும் சிரமப்பட்டுள்ளார். பலமுறை குடிமைப் பொருள் வழங்கல் அலுவலகத்துக்கு அலைந்துள்ளார். ஒவ்வொரு முறையும் மழுப்பலான பதிலே கிடைத்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு சென்று கேட்டபோது இன்னும் கார்டு தயாராகவில்லை என்று கூறி இருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த மனோன்மணி இ.சேவை மையத்துக்கு சென்று கார்டு நிலவரத்தை விசாரித்துள்ளார். அப்போது கார்டு தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

எல்லா தகவல்களும் சரியாக கொடுத்த பிறகும் ஏன் முடக்கி வைத்துள்ளார்கள் என்று புரியாமல் மனோன்மணி தவித்து இருக்கிறார்.

ஏற்கனவே மனோன்மணி விண்ணப்பித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரும் விண்ணப்பித்து இருக்கிறார். அவர் இடைத்தரகர் ஒருவர் மூலம் ரூ.14 ஆயிரம் கொடுத்து உடனடியாக கார்டு பெற்றது தெரிய வந்தது.

தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாததால்தான் மனோன்மணி இந்த தர்ணாவை கையில் எடுத்துள்ளார். தனது 3 வயது குழந்தையை எடுத்து மடியில் வைத்தபடி நடுரோட்டில் அமர்ந்து விட்டார்.

நிலைமை விவகாரம் ஆன பிறகு விரைவில் கார்டு வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்து இருக்கிறார்கள். #Rationcard

Tags:    

Similar News