செய்திகள்
மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகளை படத்தில் காணலாம்.

மதுரை அருகே குருவித்துறை பெருமாள் கோவிலில் கொள்ளை போன 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு

Published On 2018-10-16 04:12 GMT   |   Update On 2018-10-16 05:17 GMT
மதுரை குருவித்துறை பெருமாள் கோவிலில் கொள்ளை போன 4 ஐம்பொன் சிலைகள் நிலக்கோட்டை அருகே மீட்கப்பட்டது. #Statuesmuggling

நிலக்கோட்டை:

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் பிரசித்தி பெற்ற சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் உள்ளது.

3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் அருகே குருபகவான் கோவிலும் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவிலில் இருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சீனிவாசபெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் திருடுபோனது.

இது குறித்து கோவில் செயல் அலுவலர் செந்தில் குமார் காடுபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 4 தனிப்படைகள் அமைத்து சிலைகளை கொள்ளையடித்த நபர்களை தேடி வந்தனர்.

உசிலம்பட்டி அருகில் உள்ள கல்யாணிபட்டியை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று விட்டு நேற்று இரவு தனது ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

 


இரவு 11.45 மணி அளவில் நிலக்கோட்டை அருகில் உள்ள உத்தப்பநாயக்கனூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது சாலை யோரம் ஏதோ மின்னுவது போல் தென்பட்டது.

உடனே தனது வண்டியை நிறுத்தி விட்டு அருகில் சென்று பார்த்தார். அப்போது அங்கே சாமி சிலைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேசுக்கு தகவல் தெரிவித்தார். அவரது தலைமையில் போலீசார் அங்கு வந்து சிலைகளை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

இது சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் கெள்ளை போன சிலைகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சமயநல்லூர் டி.எஸ்.பி. மோகன் குமாருக்கு தகவல் தெரிவித்தார்.

அவரது தலைமையில் விளாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். விசாரணையில் அந்த சிலைகள் குருவித்துறை பெருமாள் கோவிலில் கொள்ளை போன சிலைகள் என தெரிய வந்தது.

இதனையடுத்து சோழவந்தான் போலீஸ் நிலையத்துக்கு 4 சிலைகளை போலீசார் எடுத்து சென்றனர்.

சிலைகளை கடத்தி சென்ற கும்பல் அதனை இப்பகுதியில் மறைத்து வைத்து விட்டு பின்னர் எடுத்து செல்லலாம் என்ற நோக்கத்தில் வைத்து சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சிலைகளின் உண்மைதன்மை குறித்து ஆய்வு நடத்த ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கோவிலுக்கு வருகை தர உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. #Statuesmuggling

Tags:    

Similar News