செய்திகள்

வடலூரில் என்எல்சி என்ஜினீயர் வீட்டில் புகுந்த நல்ல பாம்பு

Published On 2018-10-14 13:24 GMT   |   Update On 2018-10-14 13:24 GMT
என்எல்சி என்ஜினீயர் வீட்டில் 6 அடி நீளமுள்ள ஒரு நல்ல பாம்பு புகுந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பாம்பை மடக்கி பிடித்தனர்.

மந்தாரகுப்பம்:

கடலூர் மாவட்டம் வடலூர் புத்தன் நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 42). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் என்ஜினீயராக பணி புரிந்து வருகிறார். நேற்று இரவு திருநாவுக்கரசு தனது குடும்பத்தினருடன் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மாடிப்படியில் இருந்து ஏதோ சத்தம் கேட்டது. இதையடுத்து திருநாவுக்கரசு அந்த பகுதிக்கு சென்று பார்த்தார்.

அப்போது அங்கு 6 அடி நீளமுள்ள ஒரு நல்ல பாம்பு படம் எடுத்து சீறி கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த திருநாவுக்கரசு கூச்சலிட்டார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதையடுத்து குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் நவீன கருவி மூலம் லாவகமாக பாம்பை மடக்கி பிடித்தனர்.

பின்னர் பிடிப்பட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த பாம்பை வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News