செய்திகள்
கோப்புப்படம்

ரவுடி பினுவை 26-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு- ஜாமீனை ரத்து செய்ய போலீசார் தீவிரம்

Published On 2018-10-14 09:56 GMT   |   Update On 2018-10-14 10:17 GMT
ஜாமீன் கண்டிஷன்படி காவல் நிலையத்தில் ஆஜராகாததால் மீண்டும் கைது செய்யப்பட்ட ரவுடி பினுவை அக்டோபர் 26-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. #RowdyBinu
திருவள்ளூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் மலையம்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பிரபல ரவுடி பினு தனது சக கூட்டாளிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவர்களை போலீசார் சுற்றி வளைத்தபோது பினு உள்ளிட்ட சில ரவுடிகள் தப்பி ஓடிவிட்டனர். மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அம்பத்தூர் துணை ஆணையர் முன்பு பினு சரண் அடைந்தார். சிறையில் அடைக்கப்பட்ட பினு, ஜூன் மாதம் 21-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். மாங்காடு காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் கடந்த சில தினங்களாக காவல் நிலையத்திற்கு வரவில்லை. எனவே, அவர் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் அறிக்கை அனுப்பினர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு பகுதியில் கூட்டாளிகள் 7 பேருடன் பினு பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பினுவையும், கூட்டாளிகளையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.  அப்போது ரவுடி பினு மற்றும் கூட்டாளிகைள அக்டோபர் 26-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், ஜாமீன் நிபந்தனையை மீறியதால் நீதிமன்றத்தின் மூலம் பினுவின் ஜாமீனை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #RowdyBinu
Tags:    

Similar News