செய்திகள்

தண்டையார்பேட்டையில் கல்லூரி மாணவர்கள் மோதல்- பஸ் கண்ணாடி உடைப்பு

Published On 2018-10-13 09:06 GMT   |   Update On 2018-10-13 09:38 GMT
தண்டையார்பேட்டையில் கல்லூரி மாணவர்கள் மோதலில் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

திருவொற்றியூர் சுங்க சாவடியில் இருந்து திருவான்மியூர் நோக்கி ‘6டி’ மாநகர பஸ் புறப்பட்டு சென்றது. தண்டையார்பேட்டை மகாராணி திரையரங்கம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் மாநில கல்லூரி மாணவர்கள் நிறைய பேர் பயணம் செய்தனர்.

தியாகராஜர் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பஸ் நிற்கும் போது உள்ளே இருந்த மாநில கல்லூரி மாணவர்கள் வெளியில் நின்ற மாணவர்களை பார்த்து கிண்டல் செய்தனர். அப்போது பஸ் புறப்பட துவங்கியது.

இதனால் ஆத்திரம் அடைந்த தியாகராஜர் கல்லூரி மாணவர்கள் பஸ்சை விரட்டிச் சென்று பஸ்சுக்குள் ஏற முயன்றனர். ஆனால் பஸ் நிற்கவில்லை.

உடனே ஆவேசத்தில் பஸ் மீது கல் வீசினார்கள். இதில் பஸ்சின் பின் பக்க கண்ணாடி உடைந்து பயணிகள் மீது விழுந்தது. இதை கண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார். கல்வீசிய மாணவர்களை பிடிக்க பயணிகள் முயன்றனர். ஆனால் அதற்குள் மாணவர்கள் ஓடிவிட்டனர்.

இதுபற்றி டிரைவர் ராஜேந்திரன் தண்டையார் பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பஸ் கண்ணாடியை உடைத்த மாணவர் மகேஷ் என்பவரை கைது செய்தனர். இவர் தியாகராஜர் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.

மேலும் 6 மாணவர்களை போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று எச்சரித்து அனுப்பினார்கள்.

Tags:    

Similar News