செய்திகள்

தமிழ்நாட்டில்தான் குறைந்த கட்டணத்தில் பஸ்கள் இயக்கம்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-10-13 08:22 GMT   |   Update On 2018-10-13 08:22 GMT
மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைந்த கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்படுகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
ஈரோடு:

ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள காசிபாளையம் பணிமனையில் இன்று புதிதாக 5 பஸ்கள் இயக்க தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம். கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய பஸ்கள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனவரி மாதத்திற்கு பிறகு பாலிதின் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆறு மாத காலத்திற்கு முன்பாகவே அனைவரையும் அழைத்துப் பேசி இருக்கிறார்கள். அதனடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையிலும் மிக விரைவில் அந்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

ஒவ்வொரு பள்ளியிலும் மாவட்ட வாரியாக பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முழுமையாக பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்த கூடாது என்ற நிலைவரும். இது குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

போக்குவரத்து துறை பொறுத்தவரை அதிமுக ஆட்சிக் காலம் பொற்காலமாக அமைந்துள்ளது. ஈரோடு மண்டலத்திற்கு மட்டும் 112 புதிய வாகனங்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 51 வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன.

மேலும் 56 வாகனங்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று மட்டும் 5 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன.


மனித நேயத்தோடும் மக்களின் நலன் கருதி இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் குறைந்த கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு லாப நோக்கம் இல்லாமல் இந்த பணிகள் தொடர்ந்து செய்து வருகிறோம்.

போக்குவரத்து தொழிலாளர்கள் எண்ணிக்கை மற்றும் வாகனங்களுக்கு ஏற்ப தொழிலாளர் நலத்துறை மற்றும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்கள் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நெடுஞ்சாலைத்துறையில் நடந்த ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறித்து கேட்டபோது அமைச்சர் கூறியதாவது:-

இதற்கு நான் பதில் கூற விரும்பவில்லை. என்னை பொறுத்த வரை இந்த அரசு சிறப்பான முறையில் எந்த பணிகளை ஆற்ற வேண்டும் என்று கருதுகிறதோ அதை ஆற்றி வருகிறது

எதிர்க்கட்சி என்ற முறையில் பல கருத்துக்கள் சொல்கின்றது. அதை நேரடியாக கருத்துக்கள் பரிமாறும் போதுதான் சட்டமன்றத்தில் பதில் அளிக்க இயலும். மற்றபடி இப்போது நான் கருத்து கூற விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
Tags:    

Similar News