செய்திகள்

வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி - தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

Published On 2018-10-13 06:47 GMT   |   Update On 2018-10-13 06:47 GMT
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #TNRains
சென்னை:

வங்கக்கடலில் உருவான டிட்லி புயல் நேற்று முன்தினம் அதிகாலை வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை தாக்கியது. இரு மாநிலத்திலும் 4 மாவட்டங்களில் கடுமையான வெள்ளச்சேதம் ஏற்பட்டது.

டிட்லி புயல் கரையை கடக்காமல் காற்றழுத்த மண்டலமாக மாறி கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் நோக்கி நகர்ந்து சென்று தாக்கியது. நேற்று இரவு ஒடிசாவின் கியோஞ்சர் நகருக்கு தெற்கே 70 கி.மீ தொலைவில் நிலை கொண்டு இருந்தது.

இன்று இந்த காற்றழுத்த மண்டலம் மேலும் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்குவங்காள கடற்கரை மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்றும் மணிக்கு 55 கி.மீ வேகம் முதல் 65 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.



இதற்கிடையே மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் 16-ம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நீலகிரி, தேனி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNRains

Tags:    

Similar News