செய்திகள்
பாபநாசம் ஆற்று படித்துறையில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர்

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்

Published On 2018-10-13 04:32 GMT   |   Update On 2018-10-13 05:55 GMT
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். #ActorVijay #SAChandrasekhar #Vijaypolitics
சிங்கை:

இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று காலை பாபநாசம் வந்தார்.

அங்கு நடைபெற்ற தாமிரபரணி புஷ்கர விழாவில் அவர் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் பிறப்பால் கிறிஸ்தவனாக இருந்தாலும் இந்து தத்துவத்தை பின்பற்றுகிறேன். இந்தியாவில் பிறந்த அனைவருமே இந்துக்கள் தான். தற்போது ஆன்மீக பயணமாக நான் வந்துள்ளேன்.

நான் இந்த நிலைக்கு வருவதற்கு 45 ஆண்டுகள் கஷ்டப்பட்டுள்ளேன். ஊழலற்ற நிர்வாகத்தை அமைக்க யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். டாக்டர்கள், வக்கீல்கள் அரசியலுக்கு வருவது போல நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை.


நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும். இதை நான் அவரது தந்தையாக கூறவில்லை. பொதுமக்களில் ஒருவராக கூறுகிறேன். விஜய் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். அவர் நல்லது செய்ய வேண்டும்.

இந்த புகழ் எல்லாம் தமிழக மக்களால் வந்தது. நான் மட்டும் சந்தோ‌ஷமாக இருப்பதை விட தன் அருகில் இருப்பவர்களையும் மகிழ்வோடு வைத்து கொள்ள வேண்டும் என்பதால் தான் ஆன்மீகத்தில் ஈடுபட்டுள்ளேன்.

25 ஆண்டுகளாக ஈஷா யோகா மையத்தில் சத்குருவின் சீடராக உள்ளேன். இதுவரை 69 படங்கள் இயக்கி உள்ளேன். மன மகிழ்வுக்கு ஜாதி, மத வேறுபாடின்றி ஆன்மீகத்தில் ஈடுபடவேண்டும். 3 முறை காசிக்கு சென்றுள்ளேன். கைலாய யாத்திரையும் மேற்கொண்டுள்ளேன். தினமும் காலையில் யோகா செய்து வருகிறேன்.

பாபநாசம் மிக முக்கியமான தலம். பாவங்களை போக்கும் அற்புத தீர்த்த கட்டம் இங்குள்ளது. எல்லோரும் 100 சதவீதம் நல்லவர்களாக இருக்க முடியாது. ஏதாவது குறைகள் இருக்கும். அத்தகைய சூழலில் பாவங்கள் போக்கும் பாபநாசத்திற்கு வருவது நல்லது. உலகில் எந்த மூலையில் இருப்பவர்களும் ஒருமுறையாவது பாபநாசம் வரவேண்டும்.

காசியில் உள்ள கங்கையை போன்றே புனிதமிக்க நதி தாமிரபரணி. 144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடக்கூடிய தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. நம் முன்னோர்கள் ஆன்மீகத்தை அறிவியலுடன் இணைத்தே வகுத்துள்ளனர்.

இவ்வாறு டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறினார்.

தொடர்ந்து அவர் நாளை கன்னியாகுமரி செல்கிறார். நாளை மறுநாள் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்கிறார்.#ActorVijay #SAChandrasekhar #Vijaypolitics
Tags:    

Similar News