செய்திகள்

திருவேற்காட்டில் ஆக்கிரமித்து கட்டிய 100 வீடுகள்-கடை இடிப்பு

Published On 2018-10-10 10:01 GMT   |   Update On 2018-10-10 10:01 GMT
திருவேற்காட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகம், ஆகியவற்றை இடித்து அகற்றினர்.

பூந்தமல்லி:

திருவேற்காடு பஸ் நிலையம் அருகில் இருந்து வேத புரீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் 40 அடி சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடு, கடைகள் கட்டப்பட்டு இருந்தன.

இதனால் சாலை மிகவும் குறுகலாகி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் திருவேற்காடு நகராட்சிக்கு வந்தது. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நகராட்சி கமி‌ஷனர் சித்ரா தலைமையில் ஊழியர்கள் 2 ஜே.பி.சி. எந்திரத்துடன் அங்கு வந்தனர். அவர்கள் சிவன் கோவில் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகம், ஆகியவற்றை இடித்து அகற்றினர்.

இதேபோல் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட காடு வெட்டியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நகராட்சிக்கு சொந்தமான 9 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 2 கோடி ஆகும்.

இதில் நகராட்சி கமி‌ஷனர் சித்ரா,பொறியாளர் முத்துக் குமார், நகர அமைப்பு ஆய்வாளர் கவிதா, சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ், மேற்பார்வையாளர் குமார் உள்பட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டதையொட்டி 2 இடங்களிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

Tags:    

Similar News