செய்திகள்

காஞ்சீபுரம் பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 கொள்ளையர்கள் கைது

Published On 2018-10-04 09:18 GMT   |   Update On 2018-10-04 09:18 GMT
காஞ்சீபுரம் பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 கொள்ளையர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 125 பவுன் நகைகளை மீட்டனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம், வாலாஜா பாத், பாலுசெட்டிசத்திரம், ஒரகடம் பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக வீட்டின் பூட்டை உடைத்து அடிக்கடி கொள்ளை நடைபெற்று வந்தது.

இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதி மானி உத்திரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

காஞ்சீபுரம் நகர டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், வெற்றிச்செல்வன், பழனி, திருநாவுக்கரசு, மணிமாறன் உள்ளிட்டோர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.

காஞ்சீபுரம் அடுத்த தென்னேரி-வாலாஜாபாத் சாலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அவர்களை துரத்தி சென்று பிடித்தனர்.

அவர்களிடம் விசாரித்த போது, பல இடங்களில் வீடுபுகுந்து கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். அவர்கள் திருச்சியைச் சேர்ந்த சிங்காரவேலன், வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும் தெரிய வந்தது.

கடந்த 6 மாதங்களாக அவர்கள் பாலுசெட்டி சத்திரம், வாலாஜாபாத், ஒரகடம் ஆகிய பகுதிகளில் பகல் மற்றும் இரவு வேளைகளில் பூட்டப்பட்டிருக்கும் வீடுகளில் பூட்டை உடைத்து நகைகளை திருடி வந்தது தெரிந்தது.

அவர்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான 125 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட நகைகளை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி பார்வையிட்டார். கொள்ளையர்களை பிடித்த போலீசாரை அவர் பாராட்டினார்.

Tags:    

Similar News