செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு

Published On 2018-10-03 22:36 IST   |   Update On 2018-10-03 22:36:00 IST
ஓடும் ரெயிலில் இளம்பெண்ணிடம் 8 பவுன் செயினை ஒருவர் பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

ஜோலார்பேட்டை:

பெங்களூரு பென்சன் டவுன்பார்க் சின்னப்பகார்டனை சேர்ந்தவர் கலிமுல்லா (வயது 52). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் சென்னையில் வசிக்கும் உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் மீண்டும் கலிமுல்லா குடும்பத்துடன் சென்னையில் இருந்து யஸ்வந்த்பூர் செல்லும் வாராந்திர ரெயிலில் பெங்களூரு நோக்கி சென்றார். எஸ்.12-ம் பெட்டி முதலாவது இருக்கையில் கலிமுல்லாவின் மகள் அஸ்ராபி (25) படுத்து தூங்கினார்.

ரெயில் நள்ளிரவில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்து மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயம் அஸ்ராபி எழுந்து கழிவறைக்கு நடந்து சென்றார்.

அப்போது, கழிவறையின் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் திடீரென அஸ்ராபி அணிந்திருந்த 8 பவுன் எடையுடைய 2 தங்கசங்கிலி மற்றும் அவர் கையில் வைத்திருந்த மணிப்பர்சு ஆகியவற்றை பறித்து விட்டு ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பி சென்றார். மணிப்பர்சில் ரூ.3 ஆயிரமும், விலை உயர்ந்த செல்போன் ஒன்றும் இருந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அஸ்ராபி இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் கூறினார். நள்ளிரவு என்பதாலும், ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்து ரெயில் சிறிது தொலைவு சென்றதாலும் உடனடியாக அஸ்ராபியின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை.

ரெயில் மறுநாள் அதிகாலையில் பெங்களூரு சென்றடைந்ததும் கலிமுல்லா ரெயில்வே போலீசில் தங்க சங்கிலி பறிப்பு குறித்து புகார் அளித்தார். சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை அருகே என்பதால் பெங்களூரு ரெயில்வே போலீசார் புகார் மனுவை ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணிடம் தங்கசங்கிலி பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்.

Tags:    

Similar News