செய்திகள்

திருப்புல்லாணியில் அரசு பஸ் மீது லாரி மோதியது- பெண் பலி

Published On 2018-10-03 13:08 GMT   |   Update On 2018-10-03 13:08 GMT
அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலியானார். மாணவிகள் உள்பட 17 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

ராமநாதபுரம்:

ராமேசுவரத்தில் இருந்து இன்று காலை தென்காசிக்கு அரசு பஸ் புறப்பட்டது. டிரைவர் அருள்சேவியர் பஸ்சை ஓட்டிச் சென்றார். பஸ்சில் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் 40-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

திருப்புல்லாணி சோதனை சாவடி அருகே பஸ் வந்தபோது தூத்துக்குடியில் இருந்து எந்திரங்களை ஏற்றி கொண்டு திருச்சி சென்ற கனரக லாரி எதிரே வந்தது. அந்த லாரி எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதியது.

இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. அதில் இருந்த 50 வயது பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பஸ் டிரைவர் அருள்சேவியர், மாணவிகள் பவித்ரா, முனீசுவரி, பரமே சுவரி உள்பட 17 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் திருப்புல்லாணி போலீசார் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினரும் சம்பவ இடம் வந்து பஸ்சுக்குள் சிக்கி காயம் அடைந்தர்களை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் காயம் அடைந்த மாணவிகள், திருநெல்வேலியில் உள்ள புனித ஜோசப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். விடுதியில் தங்கி படிக்கும் அவர்கள் விடுமுறைக்கு ஊருக்கு வந்து விட்டு திரும்பும்போது தான் விபத்தில் சிக்கி உள்ளனர்.

விபத்து காரணமாக ராமநாதபுரம்- கீழக்கரை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News