செய்திகள்

குமரியில் பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

Published On 2018-10-02 11:28 GMT   |   Update On 2018-10-02 11:28 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனால் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்து உள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் தலைமறைவு குற்றவாளிகளையும் பிடிக்க தனிப்படைகளும் அமைத்திருந்தார். தொடர் குற்றச் செயலில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவும் அறிவுறுத்தி இருந்தார்.

குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் 52 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் குற்றவாளிகள் பலர் வெளியிடங்களுக்கு சென்று தலைமறைவாகி விட்டனர்.

இந்த நிலையில் குமரி மாவட்டம் குருந்தன்கோடு, கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த ஆனந்தமுருகன் (வயது 28). இவர் மீது இரணியல் போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் இருந்தது. தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், ஆனந்தை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் பரிந்துரைத்தார். அதன்படி அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து ஆனந்தை இன்ஸ்பெக்டர் சுதேசன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் அடைத்தார்.

ஆனந்த் கைது செய்யப்பட்டதை அடுத்து குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்து உள்ளது.
Tags:    

Similar News