செய்திகள்
நெட்டப்பாக்கம் அருகே ராணுவ வீரர் வீட்டில் செல்போன் திருடியவர் கைது
ராணுவ வீரர் வீட்டில் செல்போன் திருடிய மர்ம நபரை பொதுமக்கள் பிடித்து நெட்டப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.
சேதராப்பட்டு:
புதுவை நெட்டப்பாக்கத்தை அடுத்த கல்மண்டபம் பி.எஸ்.என்.எல். வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). இவர் சென்னை ஆவடியில் ராணுவ தளவாடம் தயாரிக்கும் தொழிற்சாலையில் துணை ராணுவ வீரராக உள்ளார்.
ராஜேந்திரன் தனது வீட்டின் அருகில் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று இவர் பழைய வீட்டில் விலை உயர்ந்த செல்போனை வைத்திருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அந்த செல்போனை திருடிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
அப்போது அக்கம் பக்கத்தினர் அந்த நபரை பிடித்து நெட்டப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் செல்போனை திருடிய வாலிபரிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர் வில்லியனூரை அடுத்த உறுவையாறை சேர்ந்த முருகன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.