செய்திகள்

திருப்போரூர் முருகன் கோவிலில் சிலை திருட்டு போனதாக போலீசில் திடீர் புகார்

Published On 2018-09-29 09:02 GMT   |   Update On 2018-09-29 09:02 GMT
திருப்போரூர் முருகன் கோவிலில் சிலை திருட்டு போனதாக அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:

திருப்போரூர் முருகன் கோவில் 17-ம் நூற்றாண்டில் சிதம்பர சுவாமிகளால் கட்டப்பட்டு மிகவும் பிரசித்திபெற்றது.

இந்த கோவிலில் உள்ள மூலவருக்கு பின்புறம் உள்ள உள்பிரகாரத்தில் சோமாஸ் கந்தர் சிலை உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஆடலரசு என்ற பக்தர் இந்து சமயஅற நிலையத்துறை ஆணையரிடம் சோமாஸ்கந்தர் சிலையில் நடுவில் உள்ள சிறிய கந்தன் சிலையை காணவில்லை என புகார் கொடுத்தார்.

இந்த நிலையில் 2017 ஜூன் மாதம் திடீரென நடுவில் உள்ள கந்தனோடு சேர்ந்த சிலை புதிதாக வைக்கப்பட்டதாக தெரிகிறது. இது பழமையான சிலையா? அல்லது புதிய சிலையா? என பக்தர்களிடையே குழப்பம் இருந்தது.

இதற்கிடையில் கடந்த 13-ந் தேதி சென்னை தி.நகரைச் சேர்ந்த வக்கீல் ஸ்ரீதரன் என்பவர் சோமாஸ்கந்தர் சிலையில் உள்ள கந்தன்சிலை பழையகந்தன் சிலை இல்லை. சிலை மாயமாகிஉள்ளது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி ஐ.ஜி பொன். மாணிக்கவேலுக்கு புகார் அனுப்பியுள்ளார்.

அவர் இந்த புகாரை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்பினார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் திருப்போரூர் போலீசார் சிலை மாயம் என வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனால் பக்தர்களிடையே கோயில் உள்பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள சோமாஸ் கந்தரின் சிலையின் நடுவில் உள்ள கந்தன் சிலை பழமை வாய்ந்த சிலையா? அல்லது புதிதாக செய்து வைக்கப்பட்டுள்ள சிலையா? என மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறும் போது, ‘போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சிலை மாயம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் உண்மையில் பழமை வாய்ந்த சிலை தானா? என்பது பற்றி சம்பந்தப்பட்ட கோயில் அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்தார்.

Tags:    

Similar News