செய்திகள்

ஓமலூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

Published On 2018-09-26 15:11 GMT   |   Update On 2018-09-26 15:11 GMT
ஓமலூர் அருகே தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த விவசாயை மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சக்கர செட்டியப்பட்டி  ஊராட்சி கோபிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன் (எ) சேட்டு (வயது 44). விவசாயி. இன்று காலை இவரது மஞ்சள் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார். இவரது மஞ்சள் தோட்டத்தில் உள்ள மின்சார கம்பத்தில் இருந்து மின்வயர் அறுந்து தண்ணீரில் விழுந்தது. தண்ணீர் பாய்ச்சும் போது மின்சாரம் தாக்கி சேட்டு சம்பவ இடத்தில் மயங்கி கிடந்தார். தண்ணீர் பாய்ச்ச சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது மனைவி தோட்டத்தில் சென்று பார்த்தார் அங்கு அவர் மயங்கி கிடந்தார்.  

இதைபார்த்த அவர் மனைவி கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து டிரான்ஸ் பார்மரை ஆப் செய்து விட்டு, அவரை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சேட்டு இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து அவரது உறவினர்கள் கூறும்போது, மின் கம்பத்தில் உள்ள கம்பிகள் பழுதாகியுள்ளதாக வெள்ளாளப்பட்டி மின்சார வாரியத்தில் பல முறை முறையிட்டும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்ததாகவும். இதனால் பழுதான மின் கம்பி அறுந்து  விழுந்து மின்சாரம் பாய்ந்து இறந்ததாக கூறினர். 

இது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான சேட்டுக்கு வெண்ணிலா என்ற மனைவியும், சண்முகி, தரணிகா என்ற இரண்டு மகள், சர்வேஷ் என்ற மகனும் உள்ளனர்.
Tags:    

Similar News