செய்திகள்

மதுரையில் கல்லூரி மாணவியிடம் நகை பறிப்பு

Published On 2018-09-25 16:03 IST   |   Update On 2018-09-25 16:03:00 IST
மதுரையில் கல்லூரி மாணவியிடம் மர்ம நபர்கள் 3 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.

மதுரை:

மதுரை நகரில் நகை பறிப்பு சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி விட்டது. போலீசார் நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை.

மதுரை டி.வி.எஸ்.நகரில் உள்ள மீனாட்சி ரோட்டைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகள் ஸ்ரீநிதி (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

நேற்று கல்லூரியை முடித்து விட்டு பழங்காநத்தம் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது 2 மர்ம நபர்கள் மாணவியை பின் தொடர்ந்து வந்தனர்.

இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென்று மர்ம நபர்கள், ஸ்ரீநிதியை மறித்து அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நகை பறிப்பு நடந்த இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகில் போலீசார் பல மணி நேரம் அங்கேயே நின்று வாகன சோதனையில் ஈடுபடுவதை அடிக்கடி பார்க்க முடியும். அந்த இடத்தில் போலீசார் இருந்தும் எந்தவித பயமும் இன்றி மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டிருப்பது போலீசாரின் மெத்தனத்தையே காட்டுகிறது.

Tags:    

Similar News