செய்திகள்
சேலத்தில் பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 25 பவுன் நகையை மீட்டனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் மாவட்டம், வேம்படிதாளம் பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் விசைத்தறி தொழில் நடத்தி வருகிறார். இவரின் மனைவி சாந்தி(வயது 52). இருவரும் சேலம் திருவாக்கவுண்டனூர் பை-பாஸ் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு கடந்த 30-ந் தேதி திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்றனர்.
அப்போது காரின் பின் சீட்டில் 25 பவுன் நகையை வைத்துவிட்டு மண்டபத்திற்குள் சென்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டிற்கு வந்து பார்த்த போது காரில் இருந்த நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது குறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விசாரித்ததில், தாதகாப்பட்டியில் உள்ள அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து போலீசார் 25 பவுன் நகையை மீட்டனர், மேலும் வேறு ஏதும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளாரா? என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.