செய்திகள்

ஒரத்தநாடு அருகே பெரியார் சிலை அவமதிப்பு - திமுக - திக.வினர் திரண்டதால் போலீஸ் குவிப்பு

Published On 2018-09-24 06:31 GMT   |   Update On 2018-09-24 06:31 GMT
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பெரியார் சிலைக்கு மீண்டும் அவமதிப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரத்தநாடு:

சென்னை மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 17-ந் தேதி பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரியார் சிலை அவமதிப்பு செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், போராட்டம் என தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பெரியார் சிலைக்கு மீண்டும் அவமதிப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரத்தநாடு அருகே காவராப்பட்டு கிராமத்தில் பெரியாரின் முழு உருவச் சிலை உள்ளது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து விட்டு தப்பியோடி விட்டனர்.

இன்று காலை அந்த வழியாக சென்ற தி.மு.க. மற்றும் திராவிடர் கழகத்தினர் , பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவம் குறித்து அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

இதற்கிடையே பெரியார் சிலை அவமதிப்பு சம்பவம் பற்றி ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து டி.எஸ்.பி. (பொறுப்பு) நாகராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். மேலும் அங்கு அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரியார் சிலை அவமதிப்பு செய்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News