செய்திகள்

கைதிகளுக்கு சொகுசு வசதிகள் விவகாரம் - மதுரை மத்திய சிறையில் போலீசார் சோதனை

Published On 2018-09-23 05:14 GMT   |   Update On 2018-09-23 07:00 GMT
புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வசித்த விவகாரத்தின் தொடர்ச்சியாக மதுரை மத்திய சிறையில் உதவி ஆணையர் தலைமையில் 150 போலீசார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். #MaduraiCentralPrison

மதுரை:

மத்திய சிறையில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. கைதிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை சிறைக்குள்ளேயே அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

சென்னை புழல் சிறையில் சொகுசு மெத்தை, பீடி, சிகரெட், செல்போன் போன்றவை கைதிகளுக்கு தாராளமாக கிடைத்துள்ளன. இதனை சில கைதிகள் செல்போனில் படம் பிடித்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 13-ந் தேதி புழல் சிறையில், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் சிறைக்குள் முறைகேடுகள் நடந்தருப்பது தெரியவந்தது. அங்கிருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கோவை, சேலம், கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை மத்திய சிறைகளிலும் போலீசார் அடுத்தடுத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது சிறைக்குள் தடை செய்யப்பட்ட பீடி, சிகரெட், குட்கா உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சிறைத்துறை டி.ஜ.ஜி. பழனி தலைமையில் திலகர் திடல் போலீஸ் உதவி கமி‌ஷனர் வெற்றிச் செல்வம் கரிமேடு இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் காலை 6.30 மணிக்கு மத்திய சிறைக்கு வந்தனர்.

மத்திய சிறையின் ஒவ்வொரு பிளாக்குகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் மோப்ப நாய் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் பங்கேற்றனர்.

தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பயங்கரவாதிகள் அறை போன்றவற்றில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது, சிறையில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா, பீடி, சிகரெட் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

காலை 8.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின்போது மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, ஜெயில் அதிகாரி ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர். #MaduraiCentralPrison

Tags:    

Similar News