செய்திகள்

மயிலாடுதுறையில் 23-ந் தேதி பேராசிரியர் ஜெயராமன் நடத்தும் மாநாட்டுக்கு போலீசார் அனுமதி மறுப்பு

Published On 2018-09-20 19:24 IST   |   Update On 2018-09-20 19:24:00 IST
மயிலாடுதுறையில் வருகிற 23-ந் தேதி பேராசிரியர் ஜெயராமன் நடத்தும் மாநாட்டுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

மயிலாடுதுறை:

காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டைமப்பு சார்பில் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வருகிற 23-ந் தேதி ‘இயற்கை வளம், கனிமவள பாதுகாப்பு மாநாடு’ நடைபெறுவதாக இருந்தது. இந்த மாநாட்டில் முக்கிய தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொள்ள இருந்தனர்.

இந்த நிலையில் பேராசிரியர் ஜெயராமனின் மாநாட்டுக்கு அனுமதி மறுத்து மயிலாடுதுறை போலீஸ் டி.எஸ்.பி. வெங்கடேசன் ஆணை பிறப்பித்துள்ளார். அதன் நகலை பேராசிரியர் ஜெயராமனின் இல்லத்தில் போலீசார் ஓட்டி உள்ளனர்.

போலீசார் அனுப்பிய ஆணையில், மயிலாடு துறையில் 23-ந் தேதி நடை பெற உள்ள இயற்கை வளம், கனிமவள பாதுகாப்பு மாநாட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதியில் மத்திய அரசின் திட்ட பணிகள், சட்ட திட்டங்களுக்குட்பட்டு நடந்து வருகிறது. இதற்கு எதிராக பல்வேறு சட்ட விரோத போராட்டங்களை நடத்தி பிரச்சினை ஏற்படுத்தி உள்ளீர்கள். இதனால் உங்கள் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதன் காரணமாக மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News